- தாய் கிரிதிகை திருவிழா
- அண்ணாமலை கோவில்
- திருவண்ணாமலை
- தாய் கிருத்திகை
- முருகன்
- மாடவீதி
- அண்ணாமலையார்
- கோவில்
- இறைவன்
- அருணகிரிநாதர்
- முத்தாய்த்தரு பதி…
திருவண்ணாமலை, ஜன. 28: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான முருக பக்தர்கள் காவடி ஏந்தி மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முருகர் காட்சியளித்த சிறப்புக்குரியது. அருணகிரிநாதருக்கு காட்சியளித்து, முத்தைத்தரு பத்தித் திருநகை என திருப்புகழ் பாட அடியெடுத்து கொடுத்ததும் இத்திருக்கோயிலில் தான். அண்ணாமலையார் கோயிலில், முருகர் காட்சியளித்த கம்பத்திளையனார் சன்னதி மற்றும் கோபுரத்திளையனார் சன்னதி சிறப்புக்குரியவை.
எனவே இத்திருக்கோயிலை தரிசிக்கும் பக்தர்கள் தவறாமல் முருகர் காட்சியளித்த சன்னதிகளை தரிசிப்பது வழக்கம். அதேபோல் ஆடி கிருத்திகை, தை கிருத்திகை மற்றும் பங்குனி உத்திரம் விழாவின்போது அண்ணாமலையார் கோயிலில் முருக பக்தர்கள் காவடி ஏந்தி வழிபடுவது வழக்கம். அதன்படி, தை கிருத்திகை தினமான நேற்று அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள கம்பத்திளையனார் சன்னதியில் அருள்பாலிக்கும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு கம்பத்திளையனார் சன்னதியில் இருந்து புறப்பட்டு, 200க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பால் காவடி ஏந்தி மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல், திருவண்ணாமலை வடவீதி சுப்பிரமணியர் கோயில், வேங்கிக்கால் பாலசுப்பிரமணியர் கோயில், சோமாசிபாடி முருகர் கோயில், கலசபாக்கம் அடுத்த வில்வாரணி முருகர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் நேற்று தை கிருத்திகை விழா விமரிசையாக நடந்தது.
