×

மயிலார் பண்டிகை கொண்டாட்டம் கோயில்களில் சிறப்பு வழிபாடு திருவண்ணாமலை மாவட்டத்தில்

கலசப்பாக்கம், ஜன.23: திருவண்ணாமலை மாவட்டத்தில் மயிலார் பண்டிகையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் வீட்டில் பூஜைகள் செய்து பொதுமக்கள் கொண்டாடினர். பொங்கல் பண்டிகை முடிந்து 8ம் நாள் மயிலார் பண்டிகை நெசவு தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தெய்வங்களுக்கான படையலில் மொச்சை, கொள்ளு, துவரை முதலான தானியங்களை கொண்டு செய்த குழம்பு, கூட்டு ஆகியவை இடம்பெற்றிருக்கும். இவற்றை சோற்றுக்குள் வைத்து ஆறு சிறிய உருண்டைகள் செய்து ஆறு மயில் இறகுகளை முதன்மை இலையில் வைத்து படைக்கின்றனர். பூஜை முடிந்ததும் பெண்கள் இச்சோற்று உருண்டைகளை அப்படியே விழுங்கி விடுகின்றனர். இதனால் நல்ல இல்லற வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் இப்பண்டிகை தொழிற்கருவிகளில் உறையும் தெய்வங்களை நினைத்து வழிபடும் பண்டிகையாகவும் விளங்குகிறது. அதன்படி சிவனின் நெற்றியில் இருந்து தோன்றிய சிவபெருமான், சிவபெருமானின் உக்கிர அம்சங்களில் ஒன்றான வீரபத்திரர், காலபைரவர் மற்றும் அம்மன் கோயில்களிலும் மயிலார் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி மற்றும் கலசப்பாக்கம் வட்டத்தில், கலசப்பாக்கம், கடலாடி, மேல் வில்வராயநல்லூர், மேலாரணி, காந்தபாளையம், பழங்கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், பொங்கல் திருநாளுக்கு பிறகு மீண்டும் நெசவுத் தொழிலில் ஈடுபட மயிலார் பண்டிகை அன்று பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி நெசவாளர்கள் தங்கள் வீட்டு வாசல் முன் வண்ண மயில் கோலங்களை வரைவது வழக்கம். மேலும் தொடர்ந்து தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக பூஜை அறையில் முருகப்பெருமானின் வாகனமான மயில் வரைந்து படையல் இட்டு இறைவனை வழிபட்டு அதன் பிறகு நெசவுத் தொழிலுக்கு நெசவாளர்கள் செல்வர். அதன்படி நேற்று நெசவாளர்கள் வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Tags : Mayilar festival ,Tiruvannamalai district ,Kalasappakkam ,Pongal festival ,
× RELATED மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு...