செய்யாறு, ஜன. 28: செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நகை பணம் திருடிய சம்பவத்தில் இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பைங்கினர் கிராமம் அருகேயுள்ள அவசிங்போர்டு பகுதியில் குடியிருப்பவர் சிவகுமார் மனைவி ஜெயலட்சுமி. இவர் செய்யாறில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் சில நாட்களாக பணம், நகையும் காணாமல் போன காரணத்தால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு கோமிரா பொருத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில் (டிச.10) வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.19,500 மற்றும் ஒன்றரை சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு என சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ளவை மர்ம நபர் திருடிச் சென்றதாகத் தெரிகிறது. இந்த திருட்டுக் குறித்து ஜெயலட்சுமி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் – இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்தார். மேலும், செய்யாறு டிஎஸ்பி எஸ்.கோவிந்தசாமி மேற்பார்வையில், அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.மணிகண்டன் தலைமையில், ஏழுமலை, மோகன், தங்கராஜ், ஷாஜஹான் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளைக் கொண்டு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். மேலும். இச்சம்பவம் தொடர்பாக செய்யாறு வட்டம் விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்(26) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரிடம் இருந்து ஒன்றரை சவரன் தஙக நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் வேலூர் மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.
