- சிவன்
- அண்ணாமலையார் தீர்த்தம்
- செய்யாறு
- கலசபாக்கம்
- செய்யார், கலசபாக்கம்
- பிரம்ம தீர்த்தம்
- சிவகங்கை
- தீர்த்தம்
- அண்ணாமலை கோவில்
- திருவண்ணாமலை
கலசபாக்கம், ஜன.26: கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் சுவாமிக்கு கோயில் உட்பிரகாரத்துக்குள் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் மற்றும் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள ஐயங்குளம், தாமரைக்குளம், ஈசான்ய குளம் ஆகியவற்றிலும், தை 5ம் நாளன்று தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசி மகன்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி தை 5ம் நாளன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தது.
தொடர்ந்து ரதசப்தமியான நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளம் முழங்க தீர்த்தவாரிக்கு புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
பின்னர் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அண்ணாமலையார் எழுந்தருளினார். அப்போது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களை அண்ணாமலையாருக்கு சமர்பித்து பூஜை செய்தனர். அதேபோல் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
இதையடுத்து அண்ணாமலையார் செய்யாற்றுக்கு புறப்பட்டார். கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் வழியாக தென்பள்ளிப்பட்டு ஊராட்சி மேட்டுபாளையத்திற்கு வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து அண்ணாமலையார் செய்யாற்றின் தென்கரையிலும், கலசபாக்கம் திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் வடக்கரையிலும் எழுந்தருளி நேருக்குநேர் சந்தித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
இதையடுத்து செய்யாற்றில் சூல வடிவான அண்ணாமலையாருக்கும், திருமாமுடீஸ்வரருக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. இதைதொடர்ந்து பக்தர்கள் செய்யாற்றில் புனித நீராடினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அண்ணாமலையாரையும், திருமாமுடீஸ்வரரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதில் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், போளூர் எம்எல்ஏ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தீர்த்தவாரியையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. எஸ்பி சுதாகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
