×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1 கி.மீ. தூரம் நீண்ட வரிசை 5 மணி நேரம் காத்திருப்பதால் தவிப்பு தொடர் விடுமுறையால் பக்தர்கள் திரண்டனர்

திருவண்ணாமலை, ஜன.26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், ஒரு கி.மீ. தூரம் வரை தரிசன வரிசை நீண்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு நாளும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் வருகையால் திருவண்ணாமலை நகரம் எப்போதும் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது.

இந்நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் குடியரசு தினம் காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர். அதனால், அண்ணாமலையார் கோயிலில் பொது தரிசன வரிசை மற்றும் ரூ.50 கட்டண தரிசன வரிசை கோயில் வெளி பிரகாரத்தையும் கடந்து, தேரடி வீதி வரை சுமார் 1 கி.மீ. தூரம் நீண்டது.

எனவே, சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தரிசன வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டதால், பெண்கள், முதியவர்கள் பெரிதும் தவித்தனர். மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு தரிசன வரிசையில் முன்னுரிமை அளிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
அதனால், பொது வரிசையில் சிக்கித்தவித்தபடி ஆண்களும், பெண்களும் செல்லும் நிலை ஏற்பட்டது. அதோடு, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத வட ஒத்தைவாடை தெருவில் ெதாடங்கி, தேரடி வீதிவரை திறந்தவெளி பகுதியி்ல வரிசையில் காத்திருக்கும் நிலையால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

மேலும், நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு சாறல் மழை பெய்தது. ஆனாலும், அதையும் பொருட்படுத்தாமல், திறந்தவெளி வரிசையில் நின்று பக்தர்கள் தரிசிக்கும் நிலை காணப்பட்டது. வட ஒத்தைவாடை தெருவில் மதிற்சுவரையொட்டி அமைந்துள்ள காத்திருப்பு கூடங்கள் நிரம்பியதால், திறந்த வெளி பகுதி வரை பக்தர்கள் நின்றிருந்தனர். அதேபோல், பவுர்ணமிக்கு இணையாக ஏராளமான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர். நகரின் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளை கடந்து செல்ல முடியாமல் கிரிவல பக்தர்கள் தவித்தனர். குறிப்பாக, அறிவொளி பூங்கா தொடங்கி, பூத நாராயணன் கோயில் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, விபத்துக்கு அஞ்சியபடி பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலை காணப்படுகிறது.

Tags : Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Annamalaiyar Temple ,
× RELATED வரும் 1ம் தேதி தை மாத பவுர்ணமி கிரிவலம்...