×

வரும் 31ம் தேதி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு 3 மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் சாத்தனூர் அணையில் இருந்து

திருவண்ணாமலை, ஜன.24: சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு வரும் 31ம் தேதி முதல் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம், மூன்று மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவழையும், வட கிழக்கு பருவ மழையும் போதுமான அளவு கை கொடுத்தது. எனவே, கடந்த நவம்பர் இறுதியில் சாத்தனூர் அணை முழுமையாக நிரம்பியது. அதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதன்படி, சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 118.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மி.கன அடியில் தற்போது 7,209 மி.கன அடி இருப்பு உள்ளது.

எனவே, அணையில் இருந்து நேரடி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயி சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன்அடிப்படையில், சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு வரும் 31ம் தேதி முதல் தண்ணீர் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான, அரசாணை இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சாத்தனூர் அணையில் தற்போது 7,209 மில்லியன் கன அடி நீரில், அணை பராமரிப்பு, மீன் வளர்ப்பு போன்ற தேவைக்காக 308 மி.க.அடி தேவைப்படுகிறது.

திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர், புதுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு 323 மி.க.அடி தேவைப்படும். அதோடு, மண் தூர்வினால் 300 மி.க.அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நீர் ஆவியாதல் காரணமாக 726 மி.க அடி தண்ணீர் வீணாகும். எனவே, மீதமுள்ள தண்ணீர் விவசாய பாசனத்துக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 220 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 350 கன அடியும் தண்ணீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து 100 நாட்களுக்கு 4,432 மி.கன அடி தண்ணீர் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். அதேபோல், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நீர் பங்கீடு விதிகளின்படி மூன்று தவணைகளில் சுமார் 1,200 மி.கன அடி தண்ணீர் திறக்கப்படும். நேரடி விவசாய பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பின்சம்பா பருவ சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Sathanur dam ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED மயிலார் பண்டிகை கொண்டாட்டம்...