*கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
சிவகங்கை : ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை பழைய வடிவிலேயே அமல்படுத்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 43 ஊராட்சிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை அருகே நாலுகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய உதவியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
ஊராட்சி செயலளர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார்.இதில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, அன்பு கரங்கள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண், தோழி விடுதி, மகளிர் சுய உதவி குழுக்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம், இலவச தையல் இயந்திரம், தமிழ் புதல்வன், நான் முதல்வன், கலைஞர் கைவினை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கினர்.
இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை முழுமையாகவும் பழைய வடிவிலேயே அமல்படுத்த வேண்டும். முழு சுகாதார ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி, சுகாதாரத் துறையினர், பள்ளிக் கல்வித் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். திட்ட ஒருகிணைப்பாளர் தீபா நன்றி கூறினார்.சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி மீனாட்சி தலைமை வகித்தார்.
ஊராட்சி செயலர் முத்துக்குமரன் தீர்மானங்களை வாசித்தார்.பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தொழுநோய் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை மாற்றமின்றி முழுமையாக மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
