×

அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் வெளியேறுவது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் ஆளுநர் பதவியை அவமானப்படுத்துகிறார்: கவர்னர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

* தேசபக்தி குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம்

சென்னை: அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் வெளியேறுவது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால். ஆளுநர் அவர் வகிக்கின்ற பதவியை அவமானப்படுத்துகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்துப் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டினுடைய நலனுக்காகச் செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழ்நாட்டுக்கு எதிராக, மக்களுக்காகப் பாடுபடும் நமக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதுதான் வேதனையாக இருக்கிறது. ஆளுநர், தான் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் சென்றது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், அவர் வகிக்கின்ற பதவியை, அவரே அவமானப்படுத்துகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே, ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு கேவலப்படுத்துற செயலாக இருக்கிறது.

அதிலேயும், கடந்த மூன்று ஆண்டுகளாக நம்முடைய ஆளுநர் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தயாரித்து கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது, மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்தப் பேரவை கருத வேண்டியுள்ளது. கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அரசு இது.

ஆளுநர் உரை தொடங்கும்போது ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடுவதும் – முடிவுறும்போது ‘நாட்டுப்பண்’ பாடுவதும்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய மரபு. முதலிலேயே ‘நாட்டுப்பண்’ பாடவில்லை என்பதையே திரும்பத் திரும்ப குற்றச்சாட்டாக அவர் சொல்லிக்கொண்டு வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெரும் மதிப்பை, மரியாதையைக் கொண்டுள்ளவர்கள் நாங்கள்.

தேசிய ஒருமைப்பாட்டிலேயும், நாட்டுப்பற்றிலேயும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை நாங்கள் என்பதை, இந்தப் பேரவை உறுப்பினர்கள் சார்பாக ஆளுநருக்கு அழுத்தந்திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புறேன்.
யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்துப் பாடம் எடுக்கின்ற நிலைமையில நாங்களும் இல்லை; தேசபக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு இந்த தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் இல்லை.

ஜனநாயக தேசத்தின் அரசமைப்பு மாண்பை, எதேச்சதிகாரத் தன்மையுடன் மாற்ற நினைப்பவர்கள் தான், இன்றைய காலக்கட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யாரென்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, எழும்பூர் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் தொடங்கி, நிறைவாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வரை பேசியிருக்கிறார்கள்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேச வேண்டிய நான் இன்றைக்கு ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேசும் நிலையில் இருக்கிறேன். இது அண்ணாவும், கலைஞரும், இன்னும் சொல்லப் போனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அம்மையார் ஜெயலலிதாவும் எதிர்கொள்ளாத நெருக்கடி இது. அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள்கூட இப்படி இல்லை.

முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை. அந்த வகையில், அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும், சோதனைகள் எனக்குப் புதிதல்ல; சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். என்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள், மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை எதுவும் செய்யாது.

ஆளுநர், தன்னுடைய உரையை வாசிக்காமல் வெளியேறியது ஏன் என 13 குற்றச்சாட்டுகளோடு ஒரு அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கிறது. நான் அவருக்குச் சொல்ல விரும்புவது, கடந்த நிதியாண்டில், 11.19 விழுக்காடு அளவுக்கு நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதைச் சொல்வது, நாங்கள் அல்ல.

ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை. ஆளுநர் கேள்வி கேட்க வேண்டுமென்றால், அவரை இங்கே அனுப்பி வைத்த ஒன்றிய அரசைத்தான் கேட்க வேண்டும். இன்னும் அவருக்கு நான் சில புள்ளிவிவரங்களைச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய். இது தேசிய சராசரியை விட 1.74 மடங்கு அதிகம்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 98.3 விழுக்காடு அறிவியல் ஆய்வக வசதிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஆனால், அகில இந்திய அளவில் 50 விழுக்காடு பள்ளிகளில் தான் இந்த வசதி இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒன்றிய அரசின் தரவரிசையில், தலைசிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் 33 கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கிறது. மாநில அரசுகளால் நடத்தப்படும் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்கள் நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கிறது.

(மேசையைத் தட்டும் ஒலி) நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில், தமிழ்நாடு 788 புள்ளிகளோடு, இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டினுடைய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது. சமூக முன்னேற்றக் குறியீடு என்று இதற்குப் பெயர். பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது.

இது, தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலம் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்கள் தொகை 11.2 விழுக்காடு. ஆனால், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் 1.43 விழுக்காடு மக்கள்தான் இருக்கிறார்கள். அதையும் இல்லாமல் ஆக்குவதற்கு, தாயுமானவர் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், ஐ.நா. அமைப்பின் விருதைப் பெற்றிருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான். புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவதில் தரவரிசைப் பட்டியலில், 2018-ல் கடைசியில் இருந்த தமிழ்நாடு 2022ம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்திருக்கிறது. அதிக அளவு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த மாநிலமாக இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடம். 69 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது.

நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது 73-ஆக இருந்த பேறுகால இறப்பு விகிதத்தை 40-ஆகவும், குழந்தை இறப்பு விகிதத்தை 10.4-லிருந்து 6.9-ஆகக் குறைச்சிருக்கோம். மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அரசால் தமிழ்நாடு விருது பெற்றிருக்கிறது. இப்படி ஒன்றிய அரசிடமிருந்து மட்டும் தமிழ்நாடு 65க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் ஆளுநர் விமர்சிக்கிறார் என்றால் அவருடைய பார்வைதான், பழுதுபட்ட பார்வையாக இருக்கின்றது.

நம்முடைய திட்டங்களை ஒன்றிய அரசே ‘அடாப்ட்’ பண்ணி நாடு முழுக்க செயல்படுத்துகிறார்கள். நம்மை விமர்சிக்கின்ற ஆளுநருக்கு, இவையெல்லாம் மட்டும் தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. இங்கே மதச்சண்டை இல்லை. சாதிச்சண்டை இல்லை. கும்பல் வன்முறை இல்லை. தொடர் வன்முறை இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.

* என்னைப் பொறுத்தவரைக்கும், சோதனைகள் எனக்குப் புதிதல்ல; சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். என்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள், மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை எதுவும் செய்யாது.

Tags : Chief Minister ,MK Stalin ,Governor ,R.N. Ravi ,Chennai ,
× RELATED நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு