விழுப்புரம், ஜன. 22: விழுப்புரம் காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர் நியமித்தபின் சிதம்பரம் கை ஓங்கியுள்ளது. மாணிக்கம்தாகூர் எம்பி உள்ளிட்ட மற்ற தலைவர் ஆதரவாளர்கள் மாவட்ட தலைவர் பதவிக்கு முட்டி மோதிய நிலையில் அவர்கள் ரிஜக்டு செய்யப்பட்டு சிதம்பரம் ஆதரவாளருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் ஆதரவாளர்கள் பெருமளவு இல்லாததால் புதிய தலைவருக்கு போதிய ஒத்துழைப்பில்லை என்ற விரக்தியும் இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய கட்சியான காங்கிரசில் பல்வேறு கோஷ்டி அணிகளால் பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆட்சியை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டன. தமிழகத்திலும் பல கோஷ்டி அணி தலைவர்களாக கட்சியை ஒருங்கிணைப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மாநில தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் 71 புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக டெல்லி தலைமையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட குழு மூலம் மாவட்டந்தோறும் நேர்காணல் நடத்தில் மாவட்ட தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்டவர்களிடம் விருப்ப மனுக்கள் பெற்று இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பெருமளவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரம், மாநில தலைவர் செல்வபெருந்தகை, தங்கபாலு உள்ளிட்ட தலைவர்களின் ஆதரவாளர்களுக்கே இடம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் சிதம்பரத்தின் ஆதரவாளரான சிவாவுக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் கரண்ட் மாவட்ட தலைவர் மாணிக்கம் தாகூர் ஆதரவாளர் சீனுவாசகுமார் மற்றும் மற்ற தலைவர்களின் ஆதரவாளர்களும் தலைவர் பதவிக்கு முட்டி மோதினர். கடைசியாக 3 பேர் தேர்வான நிலையில் அதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளரான சிவா என்பவருக்ேக மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தலைவராக இருந்த ஜி.கே.வாசன், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, அழகிரி ஆதரவாளர்கள் மட்டுமே காங்கிரசில் இருந்தனர். சிதம்பரம் அணியில் குறைந்த ஆதரவாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் அவரின் கை தற்போது இந்த மாவட்டத்தில் ஓங்கியிருப்பது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் சிவாவிடம் கேட்டபோது, சிதம்பரம் மூலம்தான் நான் கட்சிக்கு அறிமுகமானேன். எனது திருமணம் அவர் தலைமையில்தான் நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்று அனைத்து பதவிகளுக்கும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளேன். தற்போது ராகுல்காந்தியே என்னுடைய கட்சி அனுபவத்தை வைத்து பதவி வழங்கியிருக்கிறார். மாவட்டத்தில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு இருக்கிறது. மூத்த நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். மற்ற நிர்வாகிகளும் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் எனத் தெரிவித்தார். பிரமாண்ட முறையில் விரைவில் பதவியேற்பு விழா நடத்த சிவா திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு கட்சியின் பிற நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்குமா? என்பது போக போகத் தான் தெரியும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
