×

உளுந்தூர்பேட்டை அருகே மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி மீது அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை, ஜன. 21: திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேகர் (49) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ்நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் ஸ்டேரிங் கட்டாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து லாரி மற்றும் பேருந்துகளில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 3 பேருந்துகளின் முன்பகுதியும் உடைந்து சேதமடைந்ததுடன், 3 பேருந்துகளும் பழுதாகி மேம்பாலத்தில் நின்றன.

இந்த தொடர் விபத்துகளால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை ஏற்பட்டது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் எடைக்கல் காவல் நிலைய போலீசார் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும் மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தில் பேருந்தில் சென்ற ஆலங்குளம் கிருஷ்ணராஜ் (26), தேனி சுதாகர் (38), பாத்திமா பேகம் (45), சிவராகினி (30), சென்னை சரண்யா (37), சரண் (23), நிர்மலா (47), சவுந்தரராஜன் (27), கேரளா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (32), பீட்டர் செல்வம் (67) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ulundurpet ,Dindigul district ,Chennai ,Shekhar ,Aziznagar ,
× RELATED மற்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் ரிஜக்டு...