விழுப்புரம், ஜன. 22: விழுப்புரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் சாகசம் செய்து பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். தட்டிகேட்ட நடத்துனரை வாலிபர் தாக்கிய வீடியோவும் வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம்- பண்ருட்டி செல்லும் அரசு நகர பேருந்தில் நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர். அப்போது மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டே சாலையின் சென்டர் மீடியன் கட்டைகளை காலில் தேய்த்துக் கொண்டு செல்ல, பின்னாடி படிக்கட்டில் இருக்கும் மற்ற மாணவர்கள் அதை ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதனை பார்த்த நடத்துனர் பள்ளி மாணவர்களை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதற்குள் விழுப்புரம் அருகே ப.வில்லியனூர் என்ற இடத்தில் பேருந்து சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பேருந்தில் நடத்துனரை தாக்கியும், பேருந்தினுள் கையை ஆவேசமாக தட்டி பயணிகளையும் அச்சுறுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோவை அங்கிருந்தவர்கள் எடுத்து வைரலாக்கி உள்ளனர். இதனிடையே அரசு பேருந்து நடத்துனர் மதன் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய வளவனூர் போலீசார் அய்யனார், ஜீவா உள்ளிட்ட 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர். இதில் ஜீவாவை கைது செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அய்யனாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
தானியங்கி கதவை மூடாதது ஏன்?
விழுப்புரம் நகரில் இயங்கும் பெரும்பாலான அரசு நகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக இந்த ரீல்ஸ் எடுக்கப்பட்ட பேருந்து அதிநவீன புதிய பேருந்தாகும். அதில் தானியங்கி படிக்கட்டு இருக்கும் நிலையில் அதை டிரைவர் மூடாமல் பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால் மாணவர்கள் படியில் தொங்கியவாறே பயணித்துள்ளனர். பல அரசு நகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இருந்தும் அதனை மூடுவதற்கு டிரைவர்கள் அலட்சியம் காட்டி வருவது இதுபோன்ற சம்பவத்திற்கு வழிவகுக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
