×

பிரதமர் துவக்கி வைத்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்காத பாஜகவினர்

 

கடலூர், ஜன. 20: கடலூரில் பிரதமர் துவக்கி வைத்த ரயிலுக்கு பாஜகவினரே வரவேற்பு அளிக்காதது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நியு ஜல்பைகுரி- திருச்சிராப்பள்ளி இடையே புதிய அம்ரித் பாரத் வாராந்திர ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி துவக்கி வைத்தார். இந்த ரயில் சுமார் 2500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நேற்று மதியம் 12.20 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வந்தது.
கடலூரை பொருத்தவரை பொதுமக்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் ரயில்வே கோரிக்கை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடலூர்- சென்னை இசிஆர் ரயில்பாதை திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், பிரதமர் தொடங்கி வைத்த ரயிலுக்கு பொதுநல அமைப்புகள் சார்பில் யாரும் வரவேற்பு கொடுக்க முன்வரவில்லை. ரயில் பயணிகளும் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், பாஜக சார்பில் வரவேற்பு கொடுக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக தரப்பினர் யாரும் ரயில் நிலையம் பக்கம் வரவில்லை.
கடலூரை பொருத்தவரை இந்த வழியாக செல்லும் ரயில்கள், அதிகபட்சமாக 2 நிமிடம் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும். இருப்பினும் இந்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என்ற நிலையில் முதன்முறையாக 5 நிமிடம் நிற்க அனுமதி கொடுக்கப்பட்டது. இருப்பினும், வரவேற்பு கொடுக்கப்படாத நிலையில், சுமார் 6 நிமிடத்திற்கு பின்னர் 12.26 மணியளவில் ரயில் புறப்பட்டு சிதம்பரம் நோக்கி சென்றது. பிரதமர் துவக்கி வைத்த ரயிலுக்கு பாஜகவினரே வரவேற்பு அளிக்காதது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : BJP ,Cuddalore ,Amrit Bharat ,New Jalpaiguri ,Tiruchirappalli ,West Bengal… ,
× RELATED மற்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் ரிஜக்டு...