கரூர், ஜன. 21: கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 400க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுதும் குடும்ப பாதுகாப்பு ஒய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் (அன்பரசன் பிரிவு) மாவட்ட தலைவர் செல்வராணி தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கருர் திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 420 பேர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
