புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவினால் தொடங்கப்பட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் கடற்படை பயிற்சியை இந்தியா தவிர்த்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை காரணமாக அந்நாட்டின் மீது சாத்தியமான ராணுவ தாக்குதல்கள் குறித்த பதற்றங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவினால் ஒரு வார கால கடற்படை பயிற்சி நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா கடல் பகுதியில் நடந்த இந்த பயிற்சியில் சீனா, ரஷ்யா, ஈரான், எகிப்து, இந்தோனேஷியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன. இந்த பயிற்சியில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,‘‘இந்த பயிற்சி முற்றிலும் தென்னாப்பிரிக்காவின் ஒரு முன்முயற்சி ஆகும். இதில் சில பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்றாலும் இது ஒரு வழக்கமான பிரிக்ஸ் செயல்பாடு அல்ல. மேலும் அனைத்து பிரிக்ஸ் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவில்லை. இதுபோன்ற முந்தைய நடவடிக்கைகளிலும் இந்தியா பங்கேற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
