டாக்கா: வங்கதேசத்தில் பெட்ரோல் நிரம்பிக் கொண்டு பணம் தராமல் செல்ல முயன்றதை தடுத்த இந்து நபர் கார் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டம் கோலந்தா மோர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றியவர் ரிப்பன் சாஹா (வயது 30). இவர் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் பங்கில் பணியில் இருந்தார். அப்போது ஒரு காரில் வந்தவர்கள் ரூ.3,800க்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பணம் தராமல் செல்ல முயன்றனர். இதனால் அவர்களை தடுக்க ரிப்பன் சாஹா காரின் முன்னே சென்று நின்றுள்ளார். அதிவேகத்தில் காரை இயக்கிய நபர்கள், ரிப்பன் சாஹா மீது காரை ஏற்றி நசுக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே சாஹா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காரின் உரிமையாளரான வங்கதேச தேசியவாத கட்சியின் முன்னாள் பொருளாளரும், மாவட்ட ஜூபோ தளத்தின் முன்னாள் தலைவருமான அபுல் ஹஷேம் என்ற சுஜன் (55), அவரது ஓட்டுநர் கமல் ஹுசைன் (43) ஆகியோரை கைது செய்தனர்.
