×

அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் உயர்மட்ட தூதுக்குழு அமெரிக்கா வருகை: ரஷ்யாவுடன் நீடிக்கும் போர் முடிவுக்கு வருமா?

கீவ்: ரஷ்யாவுடன் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் நாட்டின் உயர் மட்ட தூதுக்குழு அமெரிக்காவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான 4 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த டிரம்ப் நிர்வாகம் எடுத்த முயற்சியினால் கடந்த ஆண்டு சவுதி அரேபியா மற்றும் மியாமி ஆகிய இடங்களில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சாத்தியமான அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் உயர்மட்டக் குழு அமெரிக்காவிற்கு வந்துள்ளது.

இந்தக் கூட்டம் மியாமியில் இன்று நடைபெற உள்ளது. உக்ரைன் அதிபர் அலுவலக தலைமை அதிகாரியும் முன்னாள் ராணுவ உளவு துறை தலைவர் கைரிலோ புடனோவ்,ரஸ்டம் உமரோவ், டேவிட் அரக்கேமியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் அமெரிக்க குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். அமெரிக்க குழுவில் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர், ராணுவ செயலாளர் டேன் டிரிஸ்கால் இடம் பெற்றுள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அளித்த பேட்டியில் அமைதி ஒப்பந்தத்திற்கான உக்ரைனின் திட்டங்கள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டது. அடுத்த வாரம் டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே,உக்ரைன் நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் டென்னிஸ் ஷூமைஹல் கூறுகையில்,உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளை குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலினால் கீவ் நகரில் மட்டும் 20 குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.கார்கிவ், ஒடேசா போன்ற பிராந்தியங்கள் கடும் குளிரிலும் இருட்டிலும் தவிக்கின்றன.மிதமிஞ்சிய குளிர் மக்களை வாட்டுவதால் மின்சாரத்தின் தேவை அதிகமாகி வருகிறது என்றார்.

Tags : US ,Russia ,Kiev ,President ,Donald Trump ,Ukraine ,
× RELATED பருப்பு வகைகள் மீதான வரியை குறைக்க...