வேலூர், ஜன.6: பொங்கல் பண்டிகையை நன்னடத்தை சிறைவாசிகள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பரோல் கேட்டு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் பரோல் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது சிறையில் அவர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் விடுமுறையாகும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் இது வழங்கப்படுகிறது. அதேபோல் நெருங்கிய உறவினர் இறந்தால், அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் பரோல் வழங்கப்படுகிறது. இது 15 நாட்கள் கணக்கில் தீர்ந்துவிட்டிருந்தால் ஒரு நாள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த தீபாவளியன்றும் 15க்கும் மேற்பட்ட வேலூர் சிறைவாசிகள் பரோலில் தங்கள் ஊர்களுக்கு சென்று திரும்பினர். அதேபோல் வரும் 15ம் தேதி பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடவும் அவர்களுக்கு 3 முதல் 6 நாட்கள் வரை, ஆண்டுக்கு வழங்கப்படும் 15 நாள் பரோல் கணக்கை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை சிறைவாசிகள் 3 நாள் முன்னதாக சிறை நிர்வாகத்திடம் அளித்து, உரிய பரிசீலனைக்கு பின்னர் அவர்களுக்கு பரோல் வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
