×

பாஸ்டேக் நடைமுறைகளில் பிப்.1ம் தேதி முதல் மாற்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு

 

வேலூர், ஜன.5: டோல்பிளாசாக்களை எளிதில் கடக்கும் வகையில் பாஸ்டேக் கட்டண நடைமுறையில் பிப்ரவரி மாதம் முதல் வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய நடைமுறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கார் உரிமையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பாஸ்டேக் நடைமுறைகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய பாஸ்டேக்குகளில் ‘உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்’ (கேஒய்வி) என்ற சரிபார்ப்பு முறையை முழுமையாக நீக்குவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், டேக் வாங்கிய பின் ஏற்படும் தாமதங்களும் தேவையற்ற பின்தொடர்தல்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, பாஸ்டேக் வழங்கப்பட்ட பிறகு ‘கேஒய்வி’ சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. சரியான ஆவணங்கள் இருந்தபோதிலும், வாகன உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆவணங்களை பதிவேற்றுதல், வாகன புகைப்படங்களை அனுப்புதல், டேக்கைச் சரிபார்ப்பது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த நடைமுறை பலருக்கு கால விரயத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு தீர்வு காணும் வகையில், இனிமேல் பாஸ்டேக் வழங்குவதற்கு முன்பே அனைத்து சரிபார்ப்புகளையும் வங்கிகள் மேற்கொள்ளும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

பாஸ்டேக் நடைமுறையில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் என 22 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் சில வங்கிகளை இணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘கேஒய்வி’ சரிபார்ப்பு என்பது பாஸ்டேக் சரியான வாகன எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா, போலி அல்லது நகல் டேக் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிய அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சரிபார்ப்பு படியாகும். பாதுகாப்பு நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முறை, நடைமுறையில் பலருக்கு இடையூறாக மாறியது. அதனால், சரிபார்ப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய அணுகுமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, டேக் வழங்கும் முன்பே வங்கிகள் வாஹன் தரவுத்தளத்தின் மூலம் வாகன விவரங்களை சரிபார்ப்பது கட்டாயமாகிறது.
வாஹனில் தகவல் கிடைக்காத பட்சத்தில், வாகன பதிவுச் சான்றிதழ் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படும். இதனால், டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு தனியாக ‘கேஒய்வி’ செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. ஏற்கனவே பாஸ்டேக் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும். இனி வழக்கமான ‘கேஒய்வி’ தேவையில்லை. டேக் தளர்வாக இருப்பது, தவறான வாகனத்துடன் இணைக்கப்பட்டது, தவறாக பயன்படுத்தப்பட்டது போன்ற குறிப்பிட்ட புகார் இருந்தால் மட்டுமே கேஒய்வி மேற்கொள்ளப்படும். இதன் மூலம், பாஸ்டேக் செயல்முறை வேகமாகவும் எளிதாகவும் மாறி, டேக் வாங்கிய உடனேயே பயன்படுத்தும் வசதி கிடைக்கும். அதேநேரத்தில் இடையில் வாகன உரிமைகள் மாறும்பட்சத்தில் அதற்கான விவரத்தையும் ஏற்கனவே உள்ள பாஸ்டேக்குடன் இணைக்க வேண்டும். இந்த நடைமுறை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : National Highways Authority of India ,NHAI ,FASTag ,
× RELATED கள்ளச்சந்தையில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்ற மூதாட்டி கைது