×

உரங்களை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூர், ஜன.7: வேலூர் மாவட்டத்தில் வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் போதிய அளவில் உரங்கள் உட்பட இடுபொருட்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றை பதுக்கி வைப்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் யூரியா மற்றும் பிற உரங்கள் இருப்பு வைத்து முறையாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ரபி பருவம் தொடங்கி, பருவமழை பெய்து வந்த நிலையில், இறவையி‌ல், சிறுதானியங்கள் நிலக்கடலை, பயறு மற்றும் கரும்பு சாகுபடி மற்றும் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் யூரியா – 1473 டன், டிஏபி 722 டன், பொட்டாசியம் 452 டன், கலப்பு உரங்கள் 2580 டன், சூப்பர் பாஸ்பேட் 352 டன் என மொத்தம் 5 ஆயிரத்து 535 டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், ‘வேலூர் மாவட்டத்தில் 86 தனியார் உர விரபனை நிலையங்களிலும், 55 கூட்டுறவு உர விற்பனை நிலையங்களிலும் அனைத்து வகையான உரங்கள் மற்றும் இடுபொரட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் பெருமக்கள் யூரியா உரத்தை பயிர்களுக்கு தகுந்தவாறு, உரபரிந்துரையின்படி பயன்படுத்த வேண்டும். உர விற்பனையாளர்கள் நெல், மக்காச்சோளம், வாழை, கரும்பு, காய்கறிகள் போன்ற பிரதான பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சாகுபடி பரப்பிற்கு ஏற்ப விநியோகம் செய்ய வேண்டும். பிஓஎஸ் கருவிகள் மூலம் பட்டியலிட வேண்டும். விற்பனை செய்யப்படும் உரங்களுக்கு ரசீது வழங்க வேண்டும். தீவன பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அளவுக்கு அதிகமாக யூரியா வழங்கக்கூடாது. யூரியா உட்பட உரங்கள் மற்றும் இடு பொருட்கள் பதுக்கல், கடத்தல் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், உரிமம் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags : Vellore ,
× RELATED சீட்டு பணத்தை திருப்பித்தராமல் நாயை...