சேலம், ஜன.5: சேலம் வழியே கன்னியாகுமரிக்கு சென்ற ரயிலில் கடத்திய 33கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்ஐபி) போலீசாரும் இணைந்து தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர்.
திப்ரூகர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து அந்த ரயிலில் ஏறி சோதனையிட்ட நிலையில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே பேக்கில் கேட்பாரற்று கிடந்தது. அதனை எடுத்து திறந்து பார்த்த போது, 33 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்து, கடத்தி வந்த நபர்கள் குறித்து அப்பெட்டியில் பயணித்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், அந்த பேக்கை யாரும் உரிமை கோரவில்லை. யார் கொண்டு வந்து வைத்தார்கள்? எனத் தெரியவில்லை எனக்கூறினர். இதை தொடர்ந்து 30 கிலோ கஞ்சாவையும் மீட்டு, சேலம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
