அவிநாசி, ஜன.7: அவிநாசி அருகே டிரான்ஸ்பார்மரில் ரூ.6 லட்சம் ஒயர், ஆயிலை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவிநாசி உப்பிலிபாளையம் தெக்கலூர் செல்லும் வழியில் உப்பிலிபாளையம் கூட்டுறவு கடன் வங்கி உள்ளது. இதன் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு ரூ.6 லட்சம் காப்பர் ஒயர், ஆயில் திருட்டுபோனது. இது குறித்து உதவி பொறியாளர் நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவிநாசி டி.எஸ்.பி. சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் தலைமையிலான தனிப்படை போலீசார் திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியம்பாளையம்- மருதூர் செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே 2 மர்ம நபர்கள் காரில் சுற்றித்திரிந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பிரகாஷ் (24), சரத்குமார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் இதேபோன்று காயில்களைத் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் பணம், கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.
