×

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சிறை

சேலம், ஜன.6: சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால், 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் எவரையும் பணியமர்த்த கூடாது. குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் பணியமர்த்தப்பட்டிருந்தால், பொதுமக்கள் இது தொடர்பான இலவச தொலைபேசி எண் 1098ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் நல அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், தொழிலாளர் துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள், ஓட்டல்களில் ஆய்வு செய்து, குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தால், அவர்களை மீட்டு அந்த நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் செங்கல் சூளை, வெள்ளிப்பட்டறை, ஓட்டல்களில் பணியாற்றிய 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டறிந்து, மீட்டு வருகிறோம். கடந்த ஆண்டில் மட்டும், 80க்கும் மேற்பட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 14 குழந்தை தொழிலாளர்கள் கண்டறிந்து மீட்கப்பட்டனர். ெசங்கல் சூளையில் கொத்தடிமைகள் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : Salem ,
× RELATED விபத்தில் வாலிபர் கால் துண்டானது