- எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்
- இந்தியா
- 34வது பட்டப்படிப்பு விழா 2044
- துணை ஜனாதிபதி
- சி. பி ராடகிருஷ்ணன்
- சென்னை
- துணை
- ஜனாதிபதி
- சி. பி. ராதகிருஷ்ணன்
- 34 வது பட்டப்படிப்பு விழா
- டாக்டர். MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- பல்கலைக்கழக
சென்னை: வரும் 2044 ம் ஆண்டுக்கு முன்பாக பல்வேறு துறைகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை வருகிறது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவமனை கன்வென்ஷன் அரங்கில் நேற்று நடந்தது.
இதில், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, பிஎச்டி பயின்று முடித்த 5087 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கும் விழா பல்கலைக்கழக நிறுவனர்-வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
தொடர்ந்து, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சென்னை என்று சொன்னாலே அது பாரம்பரியமான இடம் என்று நினைவுக்கு வருகிறது. இந்த சென்னை கடற்கரை தான் தமிழர்களின் பண்பாட்டை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றது. இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து உழைத்ததன் பயனாகவும், மாணவர்கள் மீது அக்கறை கொண்ட தால் இந்த பட்டமளிப்பு விழா தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மாணவர்கள் இனிமேல் தான் புதிய வாழ்க்கையை தொடங்க போகிறார்கள் என்று அர்த்தம்.
இதுவரை போட்டி என்பது என்ன என்று தெரியாமல் வளர்ந்து இருப்போம். வெற்றி என்பதும் தோல்வி என்பதும் மாறிமாறி தான் வரும். எதையும் தாங்குகின்ற மன உறுதியை பெற வேண்டும். காலையில் முதலில் உதிக்கும் சூரியன் மாலையில் மறையும் என்பதுதான் யதார்த்தம். தோல்வி தான் ஒரு மனிதனுக்கு அதிகமான அனுபவத்தையும், படிப்பினையும் தருகிறது. எந்த நிலையிலும் மாணவர்கள் தன்நிலை மறந்து விடக்கூடாது. பட்டம் பெற்று விட்டால் நமது வேலை அதோடு முடிந்து விட்டது என்று நினைக்க கூடாது.
மாற்றம் தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறது. இந்த மாணவர்களை பார்க்கும்போது நம்பிக்கை வருகிறது. 2047 இந்தியா வல்லரசு நாடாக வர வேண்டும் என பிரதமர் மோடி இலக்கை நிர்ணயித்து உள்ளார். இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி இருந்தால் நம்புவதை காட்டிலும் நகைப்பவர்கள் தான் அதிகம் இருந்திருப்பார்கள். 2044ம் ஆண்டுக்கு முன்பாக பல்வேறு துறைகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.
எதை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும் என்ற தெளிவுடன் இலக்கை கொண்டு பயணிக்க வேண்டும். எந்த நிலையிலும் குறுக்கு வழியை தேர்வு செய்யாதீர்கள். யாராலும் உங்கள் வெற்றியை தடுக்க முடியாது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் பல்கலை தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், செயலாளர் ரவிக்குமார், துணைவேந்தர் கீதாலட்சுமி, துணைத் தலைவர் பத்மநாபன், இணை துணை வேந்தர்கள் ரவிச்சந்திரன் ஜெயச்சந்திரன், டாக்டர் விஸ்வநாதன், சட்ட இயக்குநர் கோதண்டன், வாசுதேவன், ஞானசேகரன், பதிவாளர் பழனிவேலு மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
