×

அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர் என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ஜி.கே.மணி எம்எல்ஏ பாய்ச்சல்

சென்னை: சேலத்தில் ராமதாஸ் ஆதரவு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாமக என்றால் ராமதாஸ் அதன் அடையாளம். 46 ஆண்டுகளாக ராமதாசுடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலம், கட்சியில் தலைவராக இருக்கிறேன். என்னை அன்புமணி நீக்கி விட்டார் என்ற செய்தியை கேட்டு சிரிக்கத் தான் முடியும். மனித பண்பு உள்ள மனிதர்களுக்கு, இதுபோன்ற சிந்தனை வருமா? அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கியுள்ளார். தற்போது அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், என்னை எவ்வாறு கட்சியிலிருந்து நீக்க முடியும்?. அன்புமணிக்கு யாரையும் நீக்குவதற்கு அதிகாரம் இல்லை.
கட்சியில் சேர்க்கவும், நீக்கவும், பொறுப்பு கொடுப்பதற்கும் ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

தகுதியே இல்லாத ஒருவர் என்னை நீக்கியதாக, கையெழுத்து போடாமல் மொட்டையாக கடிதம் அனுப்பியுள்ளார். கையெழுத்து போட்டிருந்தாலும் அது செல்லாது. எனவே, நீக்கத்தை பெரிதாகவும், பொருட்டாகவும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. பாமகவில் சேர வேண்டும் என்றால், ராமதாசை நேரில் சென்று அன்புமணி பார்க்க வேண்டும். அவர் சேர்த்துக்கொண்டால் கட்சியில் இருக்கலாம். ஆனால், சேர்ப்பாரா என்று தெரியவில்லை. வேதனையுடன், மனம் நொந்து சொல்கிறேன். அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று, சண்டை போட்டு வாதாடியவன் நான். ஜி.கே.மணியால் தான், ஒன்றிய அமைச்சராக ஆனேன் என்று அவரே பேசியுள்ளார்.

இதனால் ராமதாசுக்கும், எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டணியில் ராஜ்சபா உறுப்பினர், சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு வாங்கி கொடுத்தது யார்?. கொஞ்சம் மனசாட்சியோடு அன்புமணி சிந்தித்து பார்க்க வேண்டும். அவரது செயல் அநாகரிகமாகவும், அவமானமாகவும் உள்ளது. ராமதாஸ் தான் எங்களுக்கு ஆலமரம். அவருடன் கருவியாக இருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறேன். தற்போது பாமகவின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும். பாமக வலிமையான கட்சி. தற்போது வலிமை நிலைகுலைந்து போய் விட்டது.

பாமகவின் நிலை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. ராமதாசின் கை ஓங்கி கொண்டிருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கில் பெண் நீதிபதி, வெளிப்படையாக அவருக்கு எத்தனை மகன் என்று கேட்டார். அவருக்கு ஒரு மகன் தான். அவருடன் சேர்ந்து செயல்பட வேண்டியது தானே என்று கூறினார். வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கே கூட இந்த சிந்தனை இருக்கிறது என்றால், உங்களுக்கு எப்படி இருக்க வேண்டும்?. கூட்டணி குறித்து, இன்னும் எந்த கட்சியுடனும் பேச தொடங்கவில்லை. எதிர்வரும் செயற்குழு, பொதுக்குழுவில் ராமதாஸ் நல்ல முடிவை எடுப்பார்.

சேலத்தில் நடக்கும் தலைமை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் செயற்குழு, பொதுக்குழு திட்டமிடப்படி நடக்கும். தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. நீதிமன்றத்திலும் கூறி விட்டது. பாமகவுக்கு அங்கீகாரம் இல்லை. யார் தலைவர் என்று சொல்வதற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி உள்ளது. எனவே, அன்புமணி தலைவர் இல்லை. இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். தொடர்ந்து, சேலத்தில் வரும் 29ம் தேதி நடக்கும் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கான இலட்சினையை ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ ஆகிய இருவரும் வெளியிட்டனர்.

Tags : Anbumani ,G.K. Mani ,MLA ,Chennai ,Salem ,Ramadoss ,PMK ,president ,G.K. Mani MLA ,
× RELATED வெளிநடப்பு செய்பவருக்கு ஓபன் சேலஞ்ச்...