வேலூர், டிச.25: வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்களை தமிழக அரசு வௌயிட்டுள்ள இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். எருது விடும் விழா தொடர்பாக கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் 2026ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள https://www.ahd..tn.gov.in/jallikattu என்ற இணையதள முகவரியின் Event Registration-ல் இணைப்பில் கண்டுள்ள உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும். எனவே, தங்களுடைய பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிலையினை மேற்படி இணையதள முகவரியில் Sign in பகுதியில் சென்று சரிபார்த்து கொள்ளலாம்.
எனவே, சம்பந்தப்பட்ட விழா குழுவினர் உடனடியாக அரசு இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது, நிகழ்வு தேதி, நிகழ்வு வகை(எருது விடும் விழா), விழா நடத்தும் அமைப்புக் குழுவின் பெயர், ஏற்பாட்டுக் குழுத் தலைவரின் பெயர், ஏற்பாட்டுக் குழுவின் முகவரி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் கைபேசி எண், மாவட்டம், வட்டம், விழா நடைபெறும் இடம், கிராமம், பின்கோடு, நிகழ்வை நடத்துவதற்கான கோரிக்கை கடிதம்(கையொப்பத்துடன்), ரூ.50 மதிப்பு உறுதி முத்திரை தாள், நிகழ்வு தளத்தின் ஓவியம், தளவமைப்பு, தளவமைப்பு புகைப்படத்தை பதிவேற்றவும்(அப்லோடு சிசிடிவி லேஅவுட் புகைப்படம்/சிசிடிவி), காப்பீட்டு நகல் ரூ.5 லட்சம்/நபர், காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடி/நிகழ்வு, முந்தைய ஆண்டு நிகழ்வின் அரசாணை, கெஜட் அறிவிப்பின் நகல், அமைப்புக் குழுவின் பெயர், பஞ்சாயத்து தீர்மான நகல், ஏதேனும் தொடர்புடைய ஆவணங்கள், எப்ஐஆர் ஆவணம் என மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேணடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
