வேலூர், டிச.25: திருவலம் அருகே முன்னாள் கடற்படை அதிகாரி வீட்டில் கதவு உடைத்து 45 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.1.5 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம அசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே கண்டிப்பேடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(63). இந்திய ராணுவத்தின் கடற்படையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 22ம் தேதி இரவு வீட்டின் தரைதளத்தில் உள்ள அறையில் தூங்கினார். நேற்றுமுன்தினம் காலை எழுந்து பார்த்தபோது மாடியில் உள்ள அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 45 சவரன் நகை, 500 கிராம் வெள்ளி நகை, மற்றும் ரூ.1.50 லட்சம் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து குணசேகரன் திருவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. அப்போது மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும் காட்பாடி டிஎஸ்பி பழனி சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை செய்தார். அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
