வேலூர், டிச.23: பாதுகாப்பான, மரியாதையான மற்றும் இனிமையான பயணத்திற்கு டிக்கெட் பரிசோதகர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளதுடன், இதுதொடர்பான விழிப்புணர்வுக்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. டிக்ெகட் சரிபார்ப்பு மற்றும் அதுதொடர்பான பணிகளின் போது, டிக்கெட் பரிசோதகர்கள்(டிடிஇக்கள்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைப் பணியாளர்களிடம் கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் மற்றும் முழு ஒத்துழைப்புடனும் பயணிகள் நடந்து கொள்ள வேண்டும். பயண டிக்கெட் பரிசோதனை என்பது ரயில்வே சட்டம், 1989ன் பிரிவுகள் 137, 138 மற்றும் 146ன் கீழ் டிக்கெட் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான பொறுப்பாகும். இந்த அத்தியாவசிய பணி, நேர்மையான பயண நடைமுறைகளை உறுதி செய்வதோடு, பயணச்சீட்டு இல்லாத மற்றும் முறைக்கேடான பயணங்களைத் தடுக்கிறது.
மேலும், பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், ஒட்டுமொத்த சேவை தரத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்படும் ரயில்வே வருவாயை பாதுகாக்கிறது. பயணிகள் எப்போதும் உரிய பயண டிக்கெட் அல்லது உரிய பயண ஆவணத்தை வைத்திருக்கவும், டிடிஇ அல்லது பரிசோதனைப் பணியாளர்கள் கேட்கும் போது அவற்றை காண்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிய பயணச்சீட்டை காண்பிக்க முடியாத சூழ்நிலைகளில், பயணிகள் அமைதி காக்கவும், முழு ஒத்துழைப்பை வழங்கவும், டிக்கெட் பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வாக்குவாதம் செய்தல், ஆக்ரோஷமாக நடந்து கொள்ளுதல், தகாத அல்லது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துதல், மிரட்டுதல், உடல் ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ தடுத்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களின் சட்டபூர்வமான உத்தரவுகளை பின்பற்ற மறுத்தல் ஆகியவை ரயில்வே சட்டம், 1989ன் கீழ் குற்றமாகும். இத்தகைய செயல்கள் அபராதம் மற்றும் வழக்கு உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
தனது அலுவலகப் பணிகளை தொழில்முறையுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளும் பெண் டிக்கெட் பரிசோதகர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் மரியாதை ஆகியவற்றிற்கு தெற்கு ரயில்வே சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், துன்புறுத்தல், மிரட்டுதல், தகாத கருத்துகளை தெரிவித்தல் அல்லது அவமரியாதையாக நடந்து கொள்ளுதல் ஆகியவை தீவிரமாகப் பார்க்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண் ஊழியர்களைத் துன்புறுத்துதல் அல்லது பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகியவற்றில் ரயில்வே நிர்வாகம் சற்றும் சகித்துக் கொள்ளாத கொள்கையை பின்பற்றுகிறது. அத்தகைய குற்றவாளிகள் கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்.
டிக்கெட் பரிசோதகர்கள் என்பவர்கள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் முன்களப் பணியாளர்கள் ஆவர் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் சவாலான சூழ்நிலைகளில், பயணிகளின் நலனுக்காகவே தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். பயணிகளின் பரஸ்பர மரியாதை, பொறுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ரயிலில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும்.
பயணிகள் சிரமங்கள் மற்றும் அபராதங்களை தவிர்க்க, தங்கள் பயணத்தைத் தொடங்கும் முன்பே பயணிகள் முன்பதிவு மையங்கள், யுடிஎஸ் மொபைல் செயலி மற்றும் பிற அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட வழிகளைப் பயன்படுத்தி செல்லுபடியாகும் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் இனிமையான பயணச்சூழலை உருவாக்க, ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கான மரியாதையை பேணுவதில் பயணிகளின் தொடர் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.
