×

மாந்திரீகத்துக்காக கழுதைகளின் வால்களை வெட்டிய மர்ம கும்பல் ரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக வீடு திரும்பின பேரணாம்பட்டில் மேய்ச்சலுக்கு விட்டபோது கொடுமை

பேரணாம்பட்டு, டிச.25: பேரணாம்பட்டில் மேய்ச்சலுக்கு விட்டபோது மாந்திரீகத்துக்காக 3 கழுதைகளின் வால்களை மர்ம கும்பல் வெட்டி கொண்டு சென்ற சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப்பகுதியில் சலவைத் தொழிலாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் சலவைத் தொழில் செய்யும் கோவிந்தராஜ், சரவணன், ராஜா, சிவா ஆகியோர் வளர்த்து வந்த சுமார் 10ம் மேற்பட்ட கழுதைகளை நேற்று முன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். பின்னர் மாலையில் கழுதைகள் வீடு திரும்பிய நிலையில், 3 கழுதைகளின் வால்கள் வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட வலியால் கத்தியபடி பரிதாபமாக வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சலவைத்தொழிலாளிகள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி அனுப்பினர். மேலும் கழுதைகளுக்கு ரத்தம் சொட்டுவதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருந்து, காட்டன் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளனர்.

தொடர்ந்து நேற்று காலை கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து கழுதைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து சலவைத் தொழிலாளர்கள் கூறுகையில், ‘கழுதைகளின் வால்களில் உள்ள முடிகளில் சிலர் தாயத்து தயாரித்து அணிந்து கொள்கின்றனர். இதனால் அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை. அதேபோல் மாந்திரீகத்துக்கும் கழுதைகளின் வால்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த நில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் வீதிகளில் மண்டை ஓடுகள் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தற்போது கழுதைகளின் வால்களை மாந்திரீகத்துக்காக வெட்டி கொண்டு சென்றுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள விலங்குகள் நல ஆர்வலர்களும், சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாந்திரீகத்துக்காக கழுதைகளின் வால்கள் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.

Tags : Peranambattu ,Vellore ,
× RELATED எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும்...