வேலூர், டிச.23: கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையையொட்டி வேலூரில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பண்டிகை நாட்கள், முக்கிய விடுமுறை நாட்கள், திருவிழாக் காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிகிறது. தொடர்ந்து, நாளை முதல் விடுமுறை தொடங்க உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையையொட்டி பயணிகள் நலன் கருதி நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, வேலூரில் இருந்து சென்னைக்கு 20 பஸ்கள், பெங்களூருக்கு 10 பஸ்கள், ஒசூருக்கு 10 பஸ்கள் என மொத்தம் 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
