*தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று களமருதூர் பகுதியில் புதிய காவல் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்டது களமருதூர் கிராமம்.
இக்கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் விபத்து வழக்குகளுக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநாவலூர் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்து வந்தனர்.
இதனால் கடும் அலைக்கழிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் இந்த புகார்கள் தொடர்பாக காவல்நிலையத்தில் இருந்து விசாரணைக்கு செல்லும் போலீசாரும் கடும் சிரமம் அடைந்தனர்.
இதனால் களமருதூர் கிராமத்தில் காவல்நிலையம் அமைக்க வேண்டும் என களமருதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் களமருதூர் கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. அதுவும் கடந்த சில மாதங்களில் மூடப்பட்டது.
இந்நிலையில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் சட்டமன்ற கூட்டத்தொடரில் களமருதூர் கிராமத்தை மையப்படுத்தி காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து பேசியதன் அடிப்படையில் காவல்துறை மானிய கோரிக்கையில் களமருதூர் காவல்நிலையம் அமைக்கப்படும் என்றும் அதற்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த காவல்நிலையத்தை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
களமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். இந்த புதிய காவல்நிலையத்தில் களமருதூர், கிளியூர், எம்.குண்ணத்தூர், நத்தாமூர், வடமாம்பாக்கம், புத்தனந்தல், நன்னாவரம், மேட்டாத்தூர், டி.ஒரத்தூர், பா.கிள்ளனூர், அயன்வேலூர், கூவாடு, களவனூர், பாச்சாப்பாளையம், கிளாப்பாளையம், ஆதனூர், எதலவாடி, கொரட்டங்குறிச்சி, பிள்ளையார்குப்பம், ஆத்தூர், திருநரங்குன்றம், சீக்கம்பட்டு, தாமல், பூவனூர், எ.அத்திப்பாக்கம், ரகுநாதபுரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையான களமருதூர் காவல்நிலையம் நேற்று திறக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகம் நடைபெறாமல் தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் புறக்கணிப்பு
உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட களமருதூர் கிராமத்தில் நேற்று தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்ட காவல்நிலையம் துவக்க விழா நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கே சட்டமன்றத்தில் அறிவித்த ஒரே ஒரு காவல் நிலையமான களமருதூர் காவல்நிலையம் துவக்க விழாவில் அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் எளிமையாக இருக்கின்ற போலீசாரை கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
