சென்னை: தென்தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து வர வர தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்வதுடன், சென்னையிலும் மழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இன்றும் தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
