×

அடர்ந்த காடுகளில் அதிவேக இணைய சேவை அமெரிக்க செயற்கைக்கோளை ஏவும் இஸ்ரோ

சென்னை: அடர்ந்த காடுகளில் அதிவேக இணைய சேவையை வழங்க அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் செலுத்த முடிவானது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி புளூபேர்ட்-6 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கியது. தற்போது ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உள்பட இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் தொடர்புக்கான புளூபேர்ட் செயற்கைக்கோள் சுமார் 6,100 கிலோ எடை கொண்டது.

இது 223 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அமைப்பை கொண்டது. விண்வெளியில் இருந்து நேரடியாக சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும். மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : ISRO ,Chennai ,Indian Space Research Organization ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...