சென்னை: 2025-26ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு வருகிற 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2025-26ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு இன்று (டிச.24) முதல் வருகிற ஜனவரி 5ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
