மதுக்கரை: கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு சொந்தமான வீடு, மதுக்கரை பிருந்தாவன் நகரில் உள்ளது. அங்கு அவரது மகள் மற்றும் உறவினர் மகள் ஆகியோர் தங்கி அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இரவு காவல் நிலைய வாகனத்தில் வீட்டிற்கு சென்ற அந்த இன்ஸ்பெக்டர், தனது வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ்காரர் மாதவ கண்ணனுக்கு, அங்கு ஒரு தனி அறையை கொடுத்து தங்க வைத்துள்ளார். அங்கு தங்கிய அந்த போலீஸ்காரர், இன்ஸ்பெக்டரின் உறவுக்கார பெண், குளியல் அறைக்கு சென்று குளிக்கும்போது மறைந்திருந்து ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அவர் வீடியோ எடுத்ததை எதேச்சையாக வெளியே வந்த இன்ஸ்பெக்டர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக போலீஸ்காரர் வைத்திருந்த செல்போனை பறித்த அவர், இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீஸ்காரர் மாதவ கண்ணனை கைது செய்த மதுக்கரை போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
