×

பலாத்காரம் செய்யப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்த 3 பேர் கைது

திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்யப்பட்ட மலையாள நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்தில் 3 பேரை திருச்சூர் போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் 20 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. இவர்கள் திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் 2வது குற்றவாளியான மார்ட்டின் ஆண்டனி, பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி ஒரு வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், நடிகை பொய் சொல்வதாகவும், இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறி பாதிக்கப்பட்ட நடிகை போலீசிலும், முதல்வர் பினராயி விஜயனிடமும் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள மார்ட்டின் ஆண்டனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சூர் போலீஸ் தெரிவித்துள்ளது.

Tags : Thiruvananthapuram ,Thrissur ,Ernakulam court ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...