×

மேலும் ஒரு வாலிபர் உடுப்பியில் கைது: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் பரிமாற்றம்

உடுப்பி: இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக தொடரப்பட்ட ஒரு தீவிர வழக்கில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள மால்பே போலீசார், தற்போது மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன் மூலம், கைதானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, போலீசார் கூறியதாவது, ‘உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித், சாந்த்ரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் மால்பேயில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர்.

பாகிஸ்தானுக்கு, தகவல்கள் வழங்கியதாக இவர்கள் 2 பேரும், கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், குஜராத் மாநிலம், ஆனந்த் தாலுகாவில் உள்ள கைலாஸ்நகரியை சேர்ந்த ஹிரேந்த் (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்து வந்த ரோஹித், சாந்த்ரி ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து கப்பல் கட்டும் தள அதிகாரிகள் மால்பே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அதன் பின்னர் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஹிரேந்தர் பணத்துக்காக ரோஹித், சாந்த்ரி ஆகியோருக்கு மொபைல் சிம் கார்டுகளை வழங்கியுள்ளார். அந்த சிம்கள் மூலம், இருவரும் இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானில் உள்ள நபர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதில், கப்பல்களின் எண்ணிக்கை, அவற்றின் நடமாட்டம் மற்றும் பிற ரகசிய விவரங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டதாக தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ரோஹித், சாந்த்ரி ஆகியோர் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ‘சுஷ்மா மரைன் பிரைவேட் லிமிடெட்’ மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தனர். அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ள தங்கள் தொடர்புகளுக்கு, கப்பல்கள் தொடர்பான ரகசிய தகவல்களையும் தொழில்நுட்ப தகவல்களையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் போலீசார் ஹிரேந்தரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு மாநிலம் முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தொடர்புகளை கொண்டிருப்பதால், வரும் நாட்களில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை மேற்கொள்ளும். நாட்டின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அனைத்து கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Tags : Udupi ,Pakistan ,Malpe police ,Indian Navy ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...