×

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகளாக புதிய நூல்கள் வெளியிடப்படவில்லை? அலுவல்நிலை பணியாளர்கள் சங்கம் வேதனை

தஞ்சாவூர், டிச.22: தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக புதிய நூல்கள் வெளியிடப்படவில்லை என பல்கலைக்கழக அலுவல் நிலைப்பணியாளர்கள் சங்கம் வேதனையடைந்துள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் தலைவர் சக்திசரவணன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் பால்ராஜ், இணை செயலாளர்கள் கஸ்தூரி, கலைவாணி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக பொருளாளர் பாபு நன்றி தெரிவித்தார்.

அப்போது, கூட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உரிய காலிப்பணியிடங்களில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியிடங்கள் 222-ல் 130 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால்,பதிவுறு எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்களில் பணியாற்றுவோர் பதவி உயர்வுக்கான தகுதிகள் இருந்தும் 8 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பல்கலைக்கழகப் பணிகள் தேக்கமடைவதோடு, பணியாளர்கள் பணிச்சுமையால் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

எனவே, காலிப்பணியிடங்களில் உரிய தகுதியுடையவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்கள் தேக்கமடைந்துள்ளதால், 2018-ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் தயாரிக்கப்படாமல் உள்ளன. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டு தோறும் நடத்தப்படவேண்டிய பேரவைக்கூட்டம் நடத்தப்பெறவில்லை, தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என பேசப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பாததால் நூலகத்தில் உள்ள லட்சக்கணக்கான நூல்கள் சரியாக பராமரிக்க இயலாத நிலை உள்ளது.

ஆய்வுப் பல்கலைக் கழகமாக விளங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுமார் 4 ஆண்டுகளாக எந்த ஒரு புதிய நூல்களும் வெளிடப்படவில்லை. தமிழக அரசின் நிதி உதவியோடு அச்சிடப்பட்டு வந்த மறுபதிப்புப் பணிகளும் தடைபட்டு நிற்கின்றன. தேர்வு பிரிவு போன்ற முக்கியமான பிரிவுகளில் அலுவல் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கண்காணிப்பாளர், உதவிப்பதிவாளர் போன்ற உயர் அதிகாரிகளே இல்லாத நிலை உள்ளது. பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பல்கலைக் கழக வளர்ச்சி தடை பட்டுள்ளது. இதனை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Thanjavur ,University Officials Association ,Thanjavur Tamil University ,Thanjavur Tamil University Officials Association ,Sakthisaravanan… ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்