சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: பாஜவினர் இனிமேலாவது நல்லபெயர் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதை தவறாக புரிந்து கொண்டு நல்ல பெயரான மகாத்மா காந்தி பெயரை எடுத்து விட்டார்கள். உலகமே மகாத்மா காந்தியை பாராட்டுகிறது, உள்ளூரில் மகாத்மா காந்தி புகழை பாஜ அழிக்க பார்க்கிறது. திட்டத்தின் பெயரில் காந்தியை எடுத்துவிட்டால், அவரது புகழ் மறைந்துவிடும் என பாஜ நினைக்கிறதா? பெயரை மாற்றுவதோடு நிற்கவில்லை. பெயரளவுக்கு உதவுவது கூட இனி இயலாது. 40% நிதியை இனி மாநிலம் செய்ய வேண்டுமாம்.
திமுக தீய சக்தியாம், விஜய் பேசியிருக்கிறார். கரூர் மரணத்திற்கு காரணமான உன்னையோ, உன் கூட்டத்தையோ கைது செய்து சிறையில் அடைக்காத திமுக தீயசக்தியா? சுரண்டல் லாட்டரியை தமிழகத்துக்கு தர வேண்டும் என்று மார்டின் வேண்டியதை மறுத்து, தமிழக மக்களின் பொருளாதாரத்தை 11.68 சதவீதமாக இந்தியாவில் முதல் மாநிலமாக உயர்த்திய திமுக தீயசக்தியா? என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க என முதல்வர் மட்டும் சினிமா வசனம் பேசலாமா என்கிறார். சாப்பாட்டில் ஊறுகாய் இருக்கலாம், ஊறுகாயே சாப்பாடாக முடியுமா? அரசியல் பேச்சில் சுவைக்காக புராணங்களில், இலக்கியத்தில், திரைப்பட காட்சியை கூறலாம்.
திரைப்படமே அரசியலாக மாறக்கூடாது. திரைப்படத்தில் நடித்ததையே முதல்வருக்கான விசாவாக கருதக் கூடாது. கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி எல்லா மதமும் அதிமுகவுக்கு சமம் என்கிறார். அதைத்தான் நாங்கள் திருப்பரங்குன்றம் தீபவழக்கில் நீங்கள் நீதிபதியை ஆதரித்ததை பார்த்தோமே. சி.ஏ.சட்டத்தை, முத்தலாக் தீர்மானத்தை, வக்ப் வாரிய திருத்தத்தை தன்வசமாக்க பாஜ முயன்ற போது நெட்டை மரம் போல் நின்று மத நல்லிணக்கத்தை உடைத்து சிதறவிட்டீர்களே. 2026ல் திமுக வெல்லும், வரலாறு அதை நிச்சயம் சொல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
