×

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து நாடு முழுவதும் விற்பனை: தொழிற்சாலை உரிமையாளர், 10 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி இன்று மனு

புதுச்சேரி, டிச. 15: புதுச்சேரியில் போலி மருந்து வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர். புதுச்சேரியில் டெல்லியை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து, நாடு முழுவதும் விற்கப்பட்டு வருவதாக புதுச்சேரி சிபிசிஐடி போலீசாருக்கு கடந்த மாதம் புகார் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயாநகரில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் பிரபல கம்பெனிகள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து, உரிமம் பெற்ற, செயல்படாத ஏஜென்சிகள் மூலம் வடமாநிலங்களில் விற்றது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய, போலி மருந்துகளை ெமாத்த விற்பனை செய்து வந்த புதுச்சேரி இளங்கோ நகரில் வசித்து வந்த சீர்காழியை சேர்ந்த ராணா, காரைக்குடியை சேர்ந்த மெய்யழகன் ஆகிய 2 பேர் முதல் முதலாக கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி ராஜாவுக்கு உதவியாக குடோன்கள் நடத்தி வந்த புதுச்சேரி அரியூர் சிவராந்தகத்தை சேர்ந்த விவேக் ஆகிய 2 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று தலைமறைவாகினர். இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட ராணாவும் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில் முன்ஜாமீன் பெற்ற ராஜா, விவேக் ஆகியோர் கடந்த 10ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவுக்கு போலி மருந்து தயாரிக்க உதவியாக இருந்த புதுச்சேரி மற்றும் கடலூரை சேர்ந்த 9 பேரை கடந்த 11ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ராணா, மெய்யப்பன் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.

வட மாநிலங்களில் அதிகளவில் போலி மருந்து விற்பனை செய்ததில் ஆக்ரா, மிர்சாபூர் ஆகிய காவல் நிலையங்களில் ராஜா, விவேக், ராணா ஆகியோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்திருப்பதை அறிந்த ஆக்ரா போலீசார் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர். ராஜா, விவேக் ஆகிய 2 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்ல பிடிவாரண்டுடன் புதுச்சேரியில் சிறை அதிகாரிகளை சந்தித்தனர்.

அதில் 2 பேரையும் வரும் 22ம் தேதி ஆக்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் வெகு நாட்களுக்கு முன்பாகவே அனுப்ப மறுத்து விட்டனர். தொடர்ந்து, ஆக்ரா போலீசார், புதுச்சேரி சிபிசிஐடி போலீசாரை அணுகினர். மற்றொரு வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதால் 18ம் தேதிக்கு பிறகு இருவரையும் அழைத்து செல்லுமாறு ஆக்ரா போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் கூறினர்.

இதனை ஏற்ற ஆக்ரா போலீசார், அதே வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள ராணாவை புதுச்சேரி இளங்கோநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை ஆக்ராவுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் ராஜா உட்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக விசாரணையை தொடங்குகின்றனர். இதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.

 

Tags : Puducherry ,CBCID ,CBCID police ,Delhi ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு