சென்னை: தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாயில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.
இந்த தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக, ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வின்பாஸ்ட் விஎப் 6 மற்றும் விஎப் 7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயார் செய்து வருகிறது.
இந்நிலையில், வின்பாஸ்ட் நிறுவனம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் (2026 ஆகஸ்ட்) இந்தியாவில் மின்சார பேருந்துகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவை மிக முக்கியமான சந்தையாக வின்பாஸ்ட் பார்க்கிறது என்பதை காட்டுகிறது. இதற்கு முன்பாகவே வின்பாஸ்ட் இந்தியாவில் மின்சார கார்கள், மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் ஜிஎஸ்எம் என்ற புதிய டாக்ஸி சேவையை தொடங்க உள்ளது.
இதுகுறித்து வின்பாஸ்ட் ஆசியா பகுதி தலைவர் பாம் சான் சவ் பேசுகையில், “மின்சார பேருந்துகள் அரசு பேருந்துகளை சுத்தமான எரிபொருளில் இயங்க வைப்பதில் பெரிய பங்கு வகிக்கும். எங்கள் மின்சார பேருந்துகள் 2026 ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் கிடைக்கும்’’ என்றார்.
இந்நிறுவனம் தற்போது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழகங்களுடன் பேசி ஆர்டர்கள் பெற முயற்சி செய்கிறது. வின்பாஸ்ட் மின்சார பேருந்துகள் 6 மீட்டரிலிருந்து 12 மீட்டர் வரை பல அளவுகளில் வரும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 260 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த பேருந்துகள் ஏற்கனவே வியட்நாமிலும் ஐரோப்பாவிலும் விற்பனையாகின்றன.
இந்தியாவில் இப்போதே வின்பாஸ்ட் மின்சார கார்களை விற்க ஆரம்பித்து விட்டது. 26 டீலர்ஷிப்கள் போட்டுள்ளது. இந்தியாவில் அரசு பேருந்துகளை மின்சாரமாக மாற்ற பெரிய திட்டங்கள் உள்ளன. குறிப்பாக பிஎம் இ-பஸ் சேவா, பிஎம் இ-டிரைவ் போன்ற திட்டங்களால் பேருந்துகள் மின்சாரமாக்கப்படுகின்றன. வின்பாஸ்ட் இந்தியாவில் மின்சார பேருந்துகளை தயாரிப்பதாக இப்போதைக்கு அறிவிக்கவில்லை, ஆனால் எதிர்காலத்தில் 100 சதவீதம் உள்ளூர் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது அசோக் லேலண்ட், டாடா, ஒலெக்ட்ரா போன்ற நிறுவனங்கள் மின்சார பேருந்துகள் தயாரிக்கின்றன. 10,900 மின்சார பேருந்துகளுக்கான மிகப்பெரிய டெண்டரையும் அரசு திறந்துள்ளது. வின்பாஸ்ட் இப்போது இந்திய மின்சார வாகன சந்தையில் பெரிய அளவில் கால் பதிக்க முயற்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
