×

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழு டிஐஜி கரூரில் திடீர் ஆய்வு

 

கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவில் உள்ள டிஐஜி நேற்று கரூர் வந்தார். சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தை நேரில் பார்வையிட்ட டிஐஜி 20 நிமிடம் ஆய்வு செய்தார். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐ விசாரணை செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது. சிபிஐ விசாரணை தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டதால் கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக சிபிஐ விசாரணை அலுவலகத்துக்கு கண்காணிப்பு குழுவை சேர்ந்த டிஐஜி அதுல்குமார் தாக்கூர் நேற்று காலை 10 மணிக்கு வந்தார். அங்கு சிபிஐ அதிகாரிகளிடம் இதுவரை நடந்த விசாரணை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மதியம் 3 மணிவரை நடந்த ஆலோசனையின் போது சிபிஐ எஸ்பி பிரேம்குமார் தலைமையிலான குழுவினர் விரிவான விளக்கங்கள் அளித்தனர். இதுவரை சேகரிக்கப்பட்ட அறிக்கையை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் மதியம் 3.30 மணியளவில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்திற்கு சென்ற டிஐஜி அங்கு 20 நிமிடம் ஆய்வு செய்துவிட்டு சென்றார். சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு அதிகாரி கரூர் வந்துள்ளதால், சிபிஐ விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

 

Tags : Vijay stampede incident ,CBI ,DIG ,Karur ,Vijay stampede ,Veluchamipuram ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...