திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு தரை இறக்கியதால் 160 பயணிகள் உயிர் தப்பினர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரபு நாடுகளுக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 160 பயணிகளுடன் நேற்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனையடுத்து விமான நிலைய இன்ஜினியர் குழுவினர், கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 1.45 மணியளவில் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சற்று நேரத்திற்குள்ளாகவே மீண்டும் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் உள்ள சாப்ட்வேரில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் விமானத்தின் எரிபொருள் டேங்கில் முழுமையாக இருந்ததால் தரையிறக்குவதிலும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து விமானி, தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பிரச்னை குறித்து எடுத்துரைத்துள்ளார். தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து சமயோசிதமாக யோசித்த விமானி, விமானத்தை தொடர்ந்து வான் பரப்பில் வட்டமடிக்க செய்தார். விமானம் சுமார் 2 மணி நேரமாக திருச்சி, புதுக்கோட்டை, குளித்தலை மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் வான்பரப்பில் வட்டமடித்தபடியே இருந்தது. இதனால் பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். விமானம் தொடர்ச்சியாக வானில் வட்டமடித்ததை கூட்டம் கூட்டமாக கவனித்த பொதுமக்கள், விமானம் விபத்துக்குள்ளாகிவிடுமோ என்ற அச்சத்தில் திக்.. திக்… மனநிலையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒரு வழியாக வானில் வட்டமடித்த விமானம், மீண்டும் திருச்சி விமான நிலையத்தின் ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டது. விமானி திறம்பட செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால், பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். விமானியின் திறமையை அனைவரும் பாராட்டினர். இதைதொடர்ந்து விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் பத்திரமாக மாலை 6 மணியளவில் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
