×

திருத்தணியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: வருவாய் துறையினர் நடவடிக்கை

திருத்தணி: திருத்தணியில், 40 அடி அகலம் கொண்ட நீர் ஓடையை மறைத்து பொது தெருவாக காட்டி வீட்டுமனைகள் போட்டு விற்பனை செய்யப்பட்டு, 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா நிலங்கள் வீட்டு மனைகளாக போட்டு விற்பனை செய்யப்பட்டது. சாய்பாபா நகர் என்று பெயர் சூட்டி அப்பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருத்தணியை சேர்ந்த தனிநபர் ஒருவர், திருத்தணியில் நீர்பாசனத்துறைக்கு சொந்தமான ஏரிக்கு மழைநீர் செல்லும் 40 அடிகள் கொண்ட நீர் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு, ஏரிக்கு மழைநீர் செல்ல வழியின்றி அனைத்து நீரோட்ட பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, வருவாய்த்துறையினர் சாய்பாபா நகரில் 2வது தெருவில் வசிக்கும் குடும்பங்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனைதொடர்ந்து, நேற்று காலை கோட்டாட்சியர் கனிமொழி, வட்டாட்சியர் குமார் ஆகியோர் முன்னிலையில், நீர்பாசனத்துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் முன் பகுதி, அத்துமீறி நீர் ஒடைக்கு இருபுறமும் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளின் முன் பகுதி அகற்றப்பட்டது.

200 குடும்பங்களுக்கு சாலை வசதி எப்படி
பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டா நிலத்தை வீட்டு மனைகளாக போட்ட போது நகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. வீட்டு மனைகளுக்கு 40 அடி அகலம் கொண்ட நீர் ஓடை சாலையாக காட்டப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி துறை (அப்போதைய பேரூராட்சி) நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள் ஏற்பட்ட பின்னர் நகராட்சி சார்பில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏரி ஓடை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதாக தனிநபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீது, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்று உத்தரவை அதிகாரிகள் பின்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், நீர்ப்பாசன துறையினர் நீர் ஓடை அமைத்தால், அங்கு வசிக்கும் 200 குடும்பங்கள் போக்குவரத்திற்கு சாலை வசதியின்றி அல்லல் படும் நிலை என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றன.

நீர் ஓடை அமைப்பது குறித்து அரசு முடிவு செய்யும்
திருத்தணி ஏரிக்கு மழைநீர் செல்லும் பழைய புல வரைபடத்தில், சித்தூர் பிரதான சாலையில் 40 அடிகள் அகலம் தொடங்கி சமமாக இல்லாமல் குறுகலாக செல்வதாக உள்ளது என்றும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் முடிந்த பின்னர் நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு சென்று ரசின் நடவடிக்கைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்ப்பாசனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஐந்து வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்ற தற்காலிக தடை
சாய்பாபா நகரில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சர்வே எண் 93/3 முழுமையாக ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் குடும்பங்களை சேர்ந்தவர்கள், அவர்களின் வீடுகளை இடிக்க தடை விதிக்கக் கோரி சென்னை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில சீராய்வு மனு செய்துள்ளனர். இதனால், குறிப்பிட்ட ஐந்து வீடுகளுக்கு மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றாமல் வருவாய்த்துறையினர் விளக்கு அளித்தனர். சீராய்வு மனு விசாரணைக்கு பிறகு நில நிர்வாக ஆணையர் உத்தரவு பின்பற்றப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

Tags : Thiruthani ,Trithani ,Water Department ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 92.41% நீர் இருப்பு