சென்னை: நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை 7-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 நாட்களில் 5,000 க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக சுமார் 8 லட்சம் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இன்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் 650 இண்டிகோ விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு, 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோவின் சேவைகள் கடந்த சில நாட்களாகவே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சிறு நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் இண்டிகோ மட்டுமே சேவை வழங்கி வந்த நிலையில், இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
