- சமாஜ்வாடி
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- ஊட்டி
- ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- நீல்கிரி மாவட்டம்
- சட்டமன்றத் தேர்தல் 2026
- தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல்
ஊட்டி : சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன. தேர்தல் ஆணையம் சார்பிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதுதவிர நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மேற்கண்ட 3 தொகுதிகள் மட்டுமின்றி மேட்டுபாளையம் அவினாசி மற்றும் பவானிசாகர் ஆகிய தொகுதிகளும் வருகிறது.
சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட எஸ்பி நிஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான வசதிகளை உறுதிசெய்ய அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், நீலகிரியில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வழி, வெளிேயறும் வழி, வாகனங்கள் நிறுத்த இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கும் அறை போன்றவைகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படும் வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் லோகநாயகி, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
