- சூலூர்
- மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
- கருமத்தம்பட்டி
- சம்பத்
- வேட்டைக்காரன் குட்டை
- கருமத்தம்பட்டி, கோவை மாவட்டம்...
சூலூர், நவ.26: கருமத்தம்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையின் சேமிப்பு வங்கி கணக்கில் குளறுபடி ஏற்படுத்தியதாக கூறி வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சம்பத் மனைவி ஷர்மிளா (37). இவர் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கருமத்தம்பட்டியில் உள்ள வங்கி கிளையில் தனி நபர் கடன் வாங்கி உள்ளார்.
அந்த கடனுக்கான மாதாந்திர தவணை 12 ஆயிரத்து 119 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு குறிப்பிட்ட கால அவகாசம் தவணை செலுத்த வேண்டும் என உத்தரவாதத்தின் பேரில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர தவணை மாதா மாதம் தானாகவே, போய் சேரும் வகையில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டு இருந்தது. ஆனால் முதல் மூன்று தவணைகளுக்கு உண்டான தொகையை வங்கி நிர்வாகம் ஷர்மிளாவின் அக்கவுண்ட்டில் பிடித்தம் செய்யாமல் நான்காவது மாதத்தில் அபராத வட்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா வங்கியை அணுகி கேட்ட போது தவணை தொகை மாதம் 12 ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதிலாக 52 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் வங்கியில் பிடித்தம் செய்யப்படவில்லை எனக் கூறிய வங்கி நிர்வாகம், இனி மேற்கொண்டு தவறை சரி செய்து கொள்வதாக கூறியுள்ளது.
தொடர்ந்து, ஷர்மிளா தவணை தொகையை சரியாக கட்டி வந்த நிலையில் திடீரென கடந்த 2021 ம் ஆண்டு சர்மிளாவின் சேமிப்பு வங்கி கணக்கு சரியான பரிவர்த்தனை செய்யப்படாத கணக்கு என அறிவித்து கணக்கை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் கவனக்குறைவால் வங்கி நிர்வாகத்தால் எடுக்கப்படாத தவணை தொகைக்கு அபராத வட்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சர்மிளா சூலூர் வழக்கறிஞர் கார்த்திகை வேலன் என்பவர் மூலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2 ஆண்டுகள் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் வங்கி சேவை குறைபாடு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான ஷர்மிளாவுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வங்கி நிர்வாகம் தர வேண்டும் எனவும் வழக்கு செலவுகளுக்காக 10 ஆயிரம் ரூபாயும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தொகை இரண்டு மாதங்களுக்குள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டி வரும் எனவும் கண்டிப்புடன் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
