×

ஒப்பணக்கார வீதியில் கனரக வாகனம், ஆம்னி பஸ்கள் நுழைய தடை

கோவை, டிச. 18: கோவை ஒப்பணக்கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை ஒப்பணக்கார வீதி ஜவுளிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என பல வணிக நிறுவனங்கள் செயல்படும் முக்கிய ஷாப்பிங் தளமாக செயல்படுகிறது. இந்நிலையில், இந்த வழியாக உக்கடத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள், தனியார் பஸ்கள், கேரள அரசு பஸ்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. குறிப்பாக திருவிழா காலங்களில் நெருக்கடியில் மக்கள் தவிக்கின்றனர். நடந்து செல்ல வழி இருக்காது. அந்த அளவுக்கு வாகனங்களால் நிரம்பியிருக்கும். இந்நிலையில், கனரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள், பாலக்காடு செல்லும் கேரள அரசு பஸ்கள் இந்த சாலையை பயன்படுத்தாமல், மாற்று பாதையை போக்குவரத்து போலீசார் சமீபத்தில் அறிவித்தனர்.

தற்போது நகரில் முக்கிய இடத்தில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒப்பணக்கார வீதி சாலையில் செல்லக்கூடாது. அதன்படி, 14 மணி நேரம் கனரக வாகனங்கள் இங்கு நுழைய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணித்து வருவதாகவும், மீறும் டிரைவர்கள் மீது அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கை இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Oppanakkara Road ,Coimbatore ,
× RELATED எஸ்ஐஆர் பணிகள்; பூர்வீக விவரங்கள் மீண்டும் ஆய்வு