சூலூர், டிச.19: சூலூரில் மாணவியிடம் பேசியதால் ஆத்திரத்தில் மாணவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிய சக மாணவரை திருப்பூரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்கில் தகராறில் ஈடுபட்டதால் போலீசில் சிக்கினார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த மணி மகன் தினேஷ் குமார் (19). சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்துக்குள் உடன் படிக்கும் சக மாணவியிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் கௌதம் என்ற மாணவர் தினேஷ் குமாரை மிரட்டி உள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து தினேஷ்குமார் வெளியே வந்த போது அங்கு வந்த கௌதம் மற்றும் அவரது 2 நண்பர்கள் தினேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கௌதம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷ்குமாரை குத்தியுள்ளார். இதில் தினேஷ்குமாருக்கு கை மற்றும் கால்களில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இதனால் வலியால் துடித்த தினேஷ்குமாரை மீட்டு அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் கௌதம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தப்பி ஓடிய கௌதம் மற்றும் 2 பேர் திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் தாங்கள் சென்ற இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடித்துள்ளனர். பெட்ரோல் அடித்து விட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது ஊழியர்கள் சுற்றி வளைத்து கௌதமை பிடித்தனர். உடன் வந்த இருவரும் தப்பி ஓடி விட்ட நிலையில் காமநாயக்கன்பாளையம் போலீசில் கௌதம் ஒப்படைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சூலூரில் சக மாணவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி வந்த விவரம் தெரிய வந்தது. இந்நிலையில் பெட்ரோல் அடித்து விட்டு பங்க்கில் தகராறு செய்த வழக்கில் காமநாயக்கன்பாளையம் போலீசார் கௌதமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து விரைவில் சூலூர் போலீசார், சக மாணவரை கத்தியால் குத்திய வழக்கு தொடர்பாகவும் கௌதமை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
