- இந்தியா
- லைனிச்சி
- முதல் அமைச்சர்
- கோயம்புத்தூர்
- மு.கே ஸ்டாலின்
- செட்டிபாளையம், கோயம்புத்தூர்
- செட்டிபாளையம்
- கோவை…
கோவை: கோவை செட்டிபாளையத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குடியிருப்பை காணொலி காட்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து சொந்த வீடு கனவு நிறைவேறியது என மாற்றுத்திறனாளிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெருமிதத்துடன் நன்றி தெரிவித்தனர்.
கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சி ஓராட்டுக்குப்பை பகுதியில் 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் சொந்த வீடின்றி அவதிப்பட்டு வந்த சுமார் 115-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்ட பணமின்றி அவதிப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளின் நிலையை உணர்ந்த அப்போதைய மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், தனியார் நிறுவன பங்களிப்புடன் குடியிருப்புகள் கட்டித்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, கோவையில் செயல்பட்டு வரும் ஜி.டி நாயுடு நிறுவனத்தின் நிதி உதவியுடன் தலா ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் ஓராட்டுக்குப்பை பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்குக்காக அவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமான குடியிருப்புகள் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு துவங்கி தீவிரமாக நடைபெற்று வந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்பில், அவர்கள் பயன்படுத்தும் வாகனத்திலேயே வீட்டிற்குள் செல்லும் வகையில் சாய்வு தரைத்தளம், ஹால், சமையலறை, பெட்ரூம், அட்டேச் பாத்ரூம், டாய்லெட், வீட்டிற்குள்ளேயே தண்ணீர் வரும் வசதி என நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. தற்போது வீடு கட்டும் பணிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்காக முதன் முறையாக உருவாக்கப்பட்ட, பிரத்யேகமான குடியிருப்பை, நேற்று கோவையில் இருந்து காணொலி காட்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், ‘‘நாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால் எங்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கவே சிலர் தயங்கி வந்ததால், ஆதரவின்றி தவித்து வந்தோம், எங்களுக்கு சொந்த வீடு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்தது. அப்படி இருக்கையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் எங்களுக்கு தலா 2 சென்ட் வீட்டுமனை வழங்கி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஜி.டி நாயுடு நிறுவனத்துடன் இணைந்து, எங்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை கேட்டறிந்து, எங்களுக்கு தகுந்தாற்போல் வீடு கட்டி முடித்து எங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
இந்த நன்றியை நாங்கள் காலம் உள்ளவரை என்றைக்கும் மறக்க மாட்டோம். முதல்வருக்கும், ஜி.டி நாயுடு நிறுவனத்திற்கும் என்றும் உறுதுணையாக இருப்போம்’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
