சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் நயினார் நாகேந்திரன் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அதிமுக தலைமையிலான அணியில் பாஜ மட்டுமே இடம் பெற்றுள்ளது. வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் சேர்க்க வேண்டும் பாஜ வலியுறுத்தி வருகிறது. ஆனால், எடப்பாடி இவர்களை இணைக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
தேமுதிக, பாமக அதிமுக கூட்டணியில் இழுக்க முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால், அவர்களும் இதுவரை இறுதியான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நடிகர் விஜயை கூட்டணியில் இழுக்கவும் அதிமுக தரப்பில் முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால், என் தலைமையில் தான் கூட்டணி என்று விஜய் அறிவித்து விட்டார். மேலும் பாஜவுடன் ஒரு போதும் கூட்டணி என்பது கிடையாது என்றும் அறிவித்து விட்டார். இது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழ்நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி சென்றுள்ள அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜ சார்பில் அமைக்கப்படும் குழுவில் யார், யார் இடம் பெற வேண்டும் என்ற பட்டியலையும் அப்போது அவர் அளிக்க திட்டமிட்டுள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைப்பதில் எடப்பாடி பிடிவாதமாக இருந்து வருகிறார்.
அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் இருவரும் ஆலோசிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் கட்சியில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகவும் நயினார் நாகேந்திரன் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இதே போல பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜ மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
